பேச்சிபாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
குடிநீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம். எல். ஏ. தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழ்நாடு நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, இ. ஆ. ப., ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் உட்புகுந்து, தற்போது குடிநீரானது உப்புநீராக மாறிவிட்டது. குழித்துறை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உட்புகுந்துள்ளது. இதனால் குடிநீரானது உப்பு நீர் கலந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.
இதனால் 08-04-2024 அன்று ஒருநாள்மட்டும் பேச்சிப்பாறை அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீரால் தாமிரபரணி ஆற்று நீரில் கலந்து உள்ள உப்பு தண்ணீர் முழுவதுமாக வெளியேறவில்லை. இதனால் பொதுமக்கள் நல்ல குடிநீர் கிடைக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகவே பொதுமக்கள் நலன்கருதி தாமிரபரணி ஆற்றில் கலந்து உள்ள உப்பு தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றுவதற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து மேலும் 5 - நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.