செஞ்சியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் இடித்து அகற்றம்
செஞ்சியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் சாலையில் மட்டப்பாறை கூட்டு ரோடு அருகே சிலர் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டி இருந்தனர். இந்த வீடுகளை அகற்றக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது.
விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நேட்டீசை அதிகாரிகள் வழங்கினார்கள்.
இதையடுத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி செஞ்சி தாசில்தார் ஏழுமலை, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி, இளநிலை பொறியாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். தொடர்ந்து அளவீடு செய்து, பொக்லைன் எந்திரம் மூலம் 3 வீடுகளை இடித்து அகற்றினார்கள். முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் விதமாக, அனந்தபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.