பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் போர் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நாட்டின் கொடூர போர்த்தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ராஃபா பகுதியில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இத்தகைய கொடூரத் தாக்குதலை இஸ்ரேல் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சர்வதேச சட்டங்களை மதிக்காமல் நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதிராகவும் , பாலஸ்தீன மக்களின் சுயாட்சி சுதந்திர உரிமையை பாதுகாக்கவும் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உன்னிகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் சகீலா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், மூர்த்தி, ரங்கராஜ், குமார், நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தாக்குதலால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகு வர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.