மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுள்ளார்.
தமிழகத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் என்பது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு என்பது ஜுலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தின் அருகே பாமக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் பதாகை வைத்து அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அவர் வைத்திருந்த பாதாகையில் ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? என்ற வாசம் இடம்பெற்றிருந்தது. மேலும் போராட்டத்தின்போது அவர்கள் மின்கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக கூறிய மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியது.