வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்!

தமிழகத்தில் பள்ளி முழு ஆண்டு தேர்வுகள் நடப்பதால் நீலகிரியில் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2024-03-21 12:23 GMT

 சுற்றுலா தளங்கள்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் முதலாவது சீஸனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2வது சீஸனும் துவங்கும். கோடை சீஸனில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சராசரியாக ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு முதல் சீஸனுக்காக வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா துறையினர் மற்றும் தோட்டக்கலை துறையினர் இணைந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் காலநிலை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கிவிட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஊட்டியில் கோடை சீஸனைபோல சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு தொடங்கி நாளையுடன் நிறைவு பெறவுள்ளது. பிளஸ் 1 தேர்வு வரும் திங்கட்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு துவங்கவுள்ளன. முழு ஆண்டு தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவில் குறைந்து நீலகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Tags:    

Similar News