தாராபுரம் : பொள்ளாச்சி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பொள்ளாச்சி சாலையில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2024-07-04 06:30 GMT

ஆக்கிரமிப்புகள் அகற்றம் 

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி சாலையில் என் சி பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து  வருகின்றனர் . இந்த பள்ளி வளாகத்தின் வெளியே சாலையோர வியாபாரிகள்  கடைகளை அமைத்தும் தங்களது வியாபாரத்தை செய்து வந்தனர்.  இந்நிலையில் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், பாதசாரிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்து வந்ததாக பொதுமக்கள் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனுக்கு தொடர்ந்து புகார்களை அளித்து வந்தனர்.

இந்த புகாரின் பேரில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் அதிரடி நடவடிக்கையாக நேற்று பூக்கடை கார்னரில் இருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரத் சாலையோரம் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக என் சி பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அருகில் சிலர் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இவற்றை அறிந்த நகர மன்ற தலைவர் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்.தாராபுரம் நகராட்சியில் உள்ள பொள்ளாச்சி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி நிர்வாகத்திற்கும், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணனுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

இதுகுறித்து தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாபு கண்ணன் கூறுகையில், தாராபுரம் நகராட்சி பகுதியில் குப்பை மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தாராபுரம் நகராட்சியை சுத்தமான நகராட்சியாக மாற்றுவதற்கு அதிரடி நடவடிக்கையாக தினமும் ஒரு வார்டு அல்லது இரண்டு வார்டு என பிரித்து 30 வார்டுகளிலும் ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளையும் சாக்கடை கழிவுகளையும் அகற்றும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் .

அதனை தொடர்ந்து  பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முதல் கட்டமாக நடைபெற்றதாக கூறினார். மேலும் தற்போது தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவக்கூடிய சூழ்நிலை நிலவி வருவதாகவும் இதனால் அந்தந்த வார்டு பகுதிகளுக்கு கொசு மருந்து அடிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி மாதத்திற்கு ஒரு மாதத்திற்கு இருமுறை கொசு மருந்து தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதில் நகராட்சி ஆணையாளர் திருமால்செல்வம் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News