"கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்" - தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
By : King Editorial 24x7
Update: 2023-10-20 13:03 GMT
தருமபுரி மாவட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பப்பட்டுள்ளது. 18.10.2023 முதல் ஆம்னி பேருந்துகளுக்கான சிறப்பு தணிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 2 நாட்களாக ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பேருந்துகளுக்கு, அதன் உரிமையாளரிடம் உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500/- ரூபாய் (ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தெரிவித்துள்ளார்.