கடற்கரையில் ஒதுங்கிய வெடிகுண்டு செயலிழக்கவைப்பு
சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நீர்மூழ்கி கப்பல்களின் சிக்னல் டிவைஸ் கருவி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டது.
Update: 2024-02-23 02:47 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி காலை உவோகத்தால் ஆன உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அப்பொருளை மீட்டு கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நீர்மூழ்கிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் டிவைஸ் கருவி என தெரியவந்தது. மேலும் அப்பொருளில் அபாயகரமானது, தொடாதீர்கள், காவல்துறைக்கு தெரிவியுங்கள் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. எனவே இதுகுறித்து சென்னை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்று சென்னையிலிருந்து வருகை தந்த நிபுணர்கள் குழுவினர் அதனை பாதுகாப்பாக வெடிக்க வைத்து செயல் இழக்க செய்தனர்.முன்னதாக புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ஆழமான குழி தோண்டப்பட்டு அதில் சிக்னல் டிவைஸ் கருவி வைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழப்பு செய்யும் கருவிகளுடன் இணைப்பு ஏற்படுத்தி அதனை வெடிக்க வைத்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.வெடிக்க வைக்கும் பணிகள் தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 மீட்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.