வெம்பக்கோட்டை அகழாய்வில் கூம்பு வடிவ தொங்கணி கண்டெடுப்பு
வெம்பக் கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கோர்க்கும் மாவுக் கல்லால் ஆன கூம்பு வடிவ தொங்கணி கண்டெடுக்கபட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அகல் ஆய்வில் அடுத்தடுத்து பல்வேறு வகையிலான ஆச்சர்யம் தரும் தொன்மையான பொருட்கள் கிடைக்கப்பெற்று வரும் நிலையில் நேற்று மாவுக் கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொங்கணி மாவுக் கல்லினால் செய்யப்பட்டுள்ளதுடன் இதன் தலைப்பகுதியில் அணிகலனுடன் கோர்ப்பதற்கான துளையிடப்பட்டு பச்சை நிறத்தில் கூம்பு வடிவில் உள்ளது. இவை 14.6 மி.மீ நீளமும் 4.2 மி.மீ சுற்றளவும் 30 மில்லி கிராம் எடையும் கொண்டவையாக இந்த அணிகலன் தொங்கணி உள்ளது. பழங்கால பெண்கள் இவற்றை அணிகலனாக பயன்படுத்தியுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தளத்தில் பதிவு செய்து தெரிவித்துள்ளனர்.