10,000 குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டிய மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா நாள்தோறும் பத்தாயிரம் குடிநீர் கேன்களில் எனது வாக்கு எனது உரிமை என்ற தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
Update: 2024-04-05 08:05 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி 20 லிட்டர் குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார். மக்களவைப் பொதுத்தேர்தல் 2024 –ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் சட்டமன்ற தொகுதி வாரியாக பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்றைய தினம் 20 லிட்டர் குடிநீர் கேன்களில் வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ”எனது வாக்கு எனது உரிமை” ”100 % வாக்களிப்பீர்” விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தொடங்கி வைத்துள்ளார்கள். தினசரி நாளொன்றுக்கு 10,000 குடிநீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வாங்கப்படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் தண்ணீர் கேன்களில் வாக்களிப்பு தொடர்பான விழிப்புணர்வினை வாக்காளர்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.