வத்திராயிருப்பில் வட்டார அளவிலான கபாடி போட்டி:அலுவலர் துவக்கி வைப்பு
வத்திராயிருப்பில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற வட்டார அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான கபாடி போட்டியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் வத்திராயிருப்பு இந்து அரசு மேல்நிலைப் பள்ளியில், மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக வட்டார அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான மாபெரும் கபாடி போட்டியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரத்தில் 09.04.2024, 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தினங்களில் வட்டார அளவிலான கபாடி போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, முதல் நாளான இன்று 09.04.2024 நரிக்குடி வட்டத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,
சாத்தூர் வட்டத்தில் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியிலும்,
10.04.2024 அன்று திருச்சுழி வட்டத்தில் எஸ்.பி.கே கல்லூரணி மேல்நிலைப் பள்ளியிலும், விருதுநகர் வட்டத்தில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், சிவகாசி வட்டத்தில் கே.எம்.கே.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில்,
திருவில்லிபுத்தூர் மங்காபுரம் மேல்நிலைப் பள்ளியிலும், 11.04.2024 அன்று அருப்புக்கோட்டை வட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காரியாபட்டி வட்டத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், இராஜபாளையம் வட்டத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெறுகிறது.
வட்டார அளவில் நடத்தப்படும் போட்டிகளில் தலா 2 அணிகள் வீதம் மொத்தம் 22 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் 13.04.2024 அன்று நடைபெறும் கபாடி போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். வட்டார அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.5000-மும், மூன்றாவது பரிசாக ரூ.3000-மும் வழங்கப்படும். பின்னர் மாவட்ட அளவில் 13.4.2024 அன்று நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சமும்,
இரண்டாம் பரிசாக ரூ.50,000-மும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா ரூ.25,000-மும் வழங்கப்பட உள்ளது. இது போல மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கபாடி போட்டியில் நேரடியாக கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும்,
இரண்டாம் பரிசாக ரூ.50,000 மும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா ரூ.25,000 மும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி இன்று வத்திராயிருப்பு வட்டம் வத்திராயிருப்பு இந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கபாடி போட்டியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.