திருச்சியில் மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சியில் மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.;
பரிசு வழங்கல்
திருச்சி மாநகர காவல்துறை கேகேநகா் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏா் பிஸ்டல் மற்றும் ஏா் ரைபிள் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப். 27, 28 என இரு நாள்கள் நடைபெற்றன. இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமாா் 340 போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.
இதில் 10 மீட்டா் சுடுதளத்தில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளைப் பெற்ற திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவா் ஜி. காா்த்திகேயன் 10 மீட்டா் ஏா் ரைபிள் பிரிவில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றாா். மேலும் ஏா் பிஸ்டல் மற்றும் ஏா் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கச் செயலா் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். போட்டியில் வென்ற 76 பேருக்கு தங்கப் பதக்கம், 69 பேருக்கு வெள்ளி, 50 பேருக்கு வெண்கலம் என மொத்தம் 195 பதக்கங்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஜி காா்த்திகேயன் வழங்கிப் பாராட்டினாா்.