மாவட்ட அளவிலான சிறுதானியங்கள், விழிப்புணர்வு பேரணி

அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சிறுதானிய கண்காட்சியை ஆட்சியர் சாந்தி பார்வையிட்டார்.

Update: 2024-06-27 03:14 GMT

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு முன்னிட்டு, மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., அவர்கள் துவக்கி வைத்து, சிறுதானிய கண்காட்சியை பார்வையிட்டு, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொது சபை சுகாதார நலன்கள் குறித்து பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்திற்காக 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் ராகி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசினால் தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட சத்துணவு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம், சிறுதானிய சமையல் போட்டி, சிறுதானிய கண்காட்சி, சிறுதானியம் தொடர்பாக வினாடி வினா போட்டி அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. மாணவியர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் சிறுதானிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து, தருமபுரி நான்கு ரோடு வரை சென்றடைந்தது.மேலும், பொதுமக்களுக்கு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சத்துணவு திட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறுதானிய கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். சிறுதானிய சமையல் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளிடம் வாழ்நாள் முழுவதும் சிறுதானிய உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறுதானிய விழப்புணர்வு வினாடி வினா போட்டியில் 6-10ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கும், 11-12ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசு பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரா.சுமதி, மாவட்ட கல்வி ஆய்வாளர் பொன்னுசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், தலைமையாசிரியர் கலைச்செல்வி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News