த.மா.கா.-பா.ஜனதா கூட்டணி
த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்தித்து பேசினார்.
பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் த.மா.கா. கூட்டணி அமைத்து உள்ளதாக நேற்று காலை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய 2 பேரும் கூட்டாக அறிவித்தனர். இதற்கிடையே சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா திடீரென சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த அதிருப்தியில் தான் யுவராஜா, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே த.மா.கா. இளைஞர் அணித் தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு முதல் த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம்.
அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜனதாவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.