திமுக கவுன்சிலர் கடும் மோதல்!
Update: 2023-12-27 09:42 GMT
அறந்தாங்கி பேருந்து நிலையம் மற்றும் நகர பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு பகல் பொழுதில் சரக்குகள் கொண்டு வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் விதம் குறித்து திமுக நகர் மன்ற துணை தலைவருக்கும்,திமுக கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர நகர்மன்ற கூட்டம் திமுக நகர் மன்ற தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகள் சம்பந்தமான குறைகள் குறித்து பேசி வந்தனர். அதில் கடந்த சில மாதங்களாக அறந்தாங்கி பகுதியில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுக்கும் விதமாக இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வைக்க வேண்டும் என்ற முக்கிய பிரச்சனைகளை கூறி பேசினர். தொடர்ந்து பேசிய நகர்மன்ற துணைத் தலைவர் முத்து என்கிற சுப்பிரமணியன் தெரிவிக்கையில் அறந்தாங்கி நகர்பகுதியில் கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக பகல் நேரங்களில் கடைகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களால் அதிக அளவு வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும்,அதனை சரி செய்யும் விதமாக இரவு 8- மணி முதல் காலை 8-மணி வரை மட்டுமே அந்த வாகனங்களை அனுமதிக்கு வேண்டும் என்றும் இதனை செய்வதால் மட்டுமே தேவையற்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்று கூறினார். அதுகுறித்து தனது கருத்தை 22-வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் பிச்சை முகமது தெரிவிக்கையில் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் கடைகளில் உள்ள வியாபாரிகளுக்கு நாம் கொண்டுவரும் இந்த புதிய விதியால் தொந்தரவு ஏற்படும் என்றும் இதனை பண்டிகை காலங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதனை கேட்ட திமுக நகர்மன்ற துணைத் தலைவர் வியாபாரிகளுக்கு ஆதரவாக தாங்கள் பேசக்கூடாது என்றும் இந்த தேவையற்ற போக்குவரத்து இடர்பாட்டினால் அறந்தாங்கி நகரத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுவதாக கூறினார். இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பேசிய திமுக உறுப்பினருக்கும்,துணைத் தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதத்தால் நகர்மன்ற கூட்டத்தில் பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகியது. உடனே அங்கு இருந்த சக நகர்மன்ற உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்ட இருவரையும் சமாதானம் செய்து அவரவர் இருக்கையில் அமர வைத்தனர். திமுக கட்சியை சேர்ந்த நகர்மன்ற துணை தலைவருக்கும் அதே கட்சியை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் நகர்மன்ற கூட்டத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..