விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் போட்டிக்கு களம் இறங்கிய திமுக எம்எல்ஏ
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் மாதம்தோறும் கடைசி சனிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அரசிடம் தங்கள் குறைகளை கூறி நிவர்த்தி செய்யவரும் விவசாயிகள் கூட்டம் முடிந்து சொந்த ஊர் திரும்ப மாலை 4 மணி ஆகும்.
இதனால் மதிய உணவு என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாக இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செந்தில்நாதன் இதனை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வரக்கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டம் முடிவுற்றபின் அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்து கடந்த இரண்டு மாதங்களாக வழங்கி வந்தார்.
பசியுடன் வீடு திரும்பாமல் இருக்க எம்.எல்.ஏ எடுத்த நடவடிக்கைக்கு விவசாயிகள் அனைவரும் எம்.எல்.ஏவிற்கு நன்றி தெரிவித்து சென்றனர். இந்நிலையில் இதனை கேள்விப்பட்ட மானாமதுரை தொகுதி திமுக எம்.எல்.ஏ தமிழரசி உடனே போட்டிக்காக இந்த மாதம் தான் உணவு வழங்குவதாக கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே உணவிற்கு ஏற்பாடு செய்து வழங்கினார்.
இதனை கண்ட விவசாயிகள் முன்னதாக பட்டினியாக செல்லும்போது கண்டுகொள்ளாதவர்கள் எதிர்கட்சி எம்.எல்.ஏ வழங்கியதும் அதற்கு போட்டியாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ வழங்குவது என்பது ஏன் என கேள்வி எழுப்பி சென்றனர்.