கோவையில் திமுக முப்பெரும் விழா - ராஜேஸ்குமார் எம்பி அழைப்பு
கோவையில் வருகிற ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநாட்டில், திமுகவினர் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 40 லோக்சபா தொகுதிகளிலும், வெற்றிபெறச் செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா, திமுக சார்பில் வருகிற ஜூன் 15ம் தேதி மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், தேர்தலில் வெற்றிபெற்ற 40 எம்.பிக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட பேச உள்ளனர். நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஓட்டுச் சாவடி முகவர்கள் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.