திமுக இளைஞரணி மாநாடு: பாரப்பட்டி சுரேஷ்குமார் வேண்டுகோள்
இளைஞரணி மாநாட்டில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் பாரப்பட்டி சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தி.மு.க. தொடங்கிய நாள் முதல் தனது கொள்கை, கோட்பாடுகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது மாவட்ட, மாநில மாநாடுகள் தான்.
அண்ணா தலைமையில், கருணாநிதி கூட்டிய மாநாடுகளில், கட்சியினர் நான்கு, ஐந்து நாட்கள் கலந்து கொண்ட வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் தி.மு.க.வுக்கு தான் உண்டு. தேர்தலுக்கு முன்னும், பின்னும் நடக்கும் இது போன்ற மாநாடுகள் தான் தலைமைக்கும், கடை கோடி தொண்டனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை, பற்றை, பாசத்தை வெளிக்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் அதிரடி மாற்றங்களும், ஆட்சி மாற்றங்களும் ஏற்பட காரணமாக பல மாநாடுகள் அமைந்தன. அந்த வகையில் தான் சேலத்தில் இளைஞரணி செயலாளர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞரணி 2-வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடக்கிறது.
முதல் இளைஞரணி மாநாடு கருணாநிதி முதல்வராக இருந்த போது, அப்போதைய இளைஞரணி செயலாளர் தளபதி தலைமையில், கடந்த, 2007-ல் நடந்தது. தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெறும் வகையில், மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு ஏற்பாடுகளை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், முதன்மை செயலாளரும், நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு செய்துள்ளார்.
தென் இந்தியா மட்டுமின்றி இந்தியாவே எதிர்பார்க்கும் இரும்பு மனிதர் தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலின் வியூகங்களை வகுக்க உள்ள இந்த மாநாட்டில் அனைவரும் கூடிடுவோம். இந்தியாவின் வரலாறு காவிரிக்கரையில் தான் எழுதப்பட வேண்டும் என்ற அண்ணாதுரையின் கூற்றை மெய்பிப்போம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.