பேராவூரணியில் மாணவர்களுக்கு முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் அறிவுரை
பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா பள்ளியில், மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா, செவ்வாய்க்கிழமை காலை பள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனர் தலைவரும்,
குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "மாணவ, மாணவிகள் தங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும். தற்போதைய அறிவியல் யுகத்தில் அலைபேசிகள் அவசியம் தான்.
ஆனால் அதனை முறையாக கையாள தெரிந்திருக்க வேண்டும். நல்லவற்றை எடுத்துக்கொண்டு, அல்லாதவற்றை விட்டுவிட வேண்டும். மருத்துவமும், பொறியியலும் மட்டும் படிப்பு அல்ல.
அதனையும் தாண்டி பல்வேறு படிப்புகள் உள்ளன. மொழிபெயர்ப்பு துறை, குரூப் தேர்வுகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி, பின் தங்கிய பகுதியான நமது கிராமப்புற மாணவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். நீங்கள் எல்லாம் உயர் பதவிகளுக்கு வரவேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி நிர்வாக இயக்குனர் எம்.நாகூர் பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளரும், கல்விப் புல இயக்குனருமான பொறியாளர் அஸ்வின் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் அறங்காவலர்கள் மா.ராமு, மா.கணபதி, ஆனந்தன், நபிஷா பேகம், மற்றும் அரவிந்த், விஜய் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், 11 ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்கள், மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதுகலை விலங்கியல் ஆசிரியை ஸ்ரீ தனலட்சுமி வரவேற்றார். நிறைவாக முதுகலை ஆங்கில ஆசிரியை ரமாதேவி நன்றி கூறினார்.