கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்தவர் பலி: நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை!

தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கந்துவட்டி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கோரிக்கை.

Update: 2024-03-13 17:06 GMT

காவல்துறை விசாரணை

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் கனி நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் கட்டிட தொழிலாளி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் வட்டி தொழில் செய்து வரும் கந்து வட்டி நபரான சோடா என்ற சிவாவிடம் அவசர தேவைக்காக ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் இதற்காக வட்டி பணத்தை முறையாக செலுத்தியும் வட்டி வாங்கிய தொகைக்கு கூடுதலாக பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கந்து வட்டி தொழில் செய்யும் சிவா கடந்த சில மாதங்களாக கட்டிடத் தொழிலாளி பொன்ராஜை மிரட்டி வந்ததுடன் வட்டி பணத்தை வழங்காவிட்டால் திருநெல்வேலியில் இருந்து ஆட்களை கூட்டி வந்து உன்னை அடித்து பணத்தை வாங்குவேன் என்று மிரட்டி தகராறு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பொன்ராஜ் சோடா என்ற சிவாவிடம் பணத்தை முழுவதுமாக கொடுத்து விடுகிறேன் அவகாசம் தாருங்கள் என கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பொன்ராஜ்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு வட்டி பணம் இன்னும் 60 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் அதை உடனடியாக வழங்க வேண்டும் இல்லை என்றால் ஆளை வைத்து கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும் கடந்த ஆறாம் தேதி காலை பொன்ராஜ் கட்டிட வேலைக்கு செல்லும்போது அவரை வழி மறித்த சிவா உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் இல்லை என்றால் இந்த ஊரில் இருக்க முடியாது என மிரட்டி உள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பொன்ராஜ், கடந்த ஐந்தாம் தேதி வெளியே கடையில் பூச்சி மருந்தை வாங்கி குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி வீட்டிற்கு வந்து கீழே விழுந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பொன்ராஜை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் பரிதாபமாக இறந்துள்ளார். இதைத்தொடர்ந்து பொன்ராஜ் இறப்பிற்கு காரணமான கந்து வட்டி நபரான சோடா என்ற சிவாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொன்ராஜின் மனைவி தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் புதியம்புத்தூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் கந்து வட்டி நபர் சிவா மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் காரணமாக சாதாரணமாக கூலி தொழிலாளர்கள் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த கந்து வட்டி கும்பலை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News