போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-27 01:24 GMT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் நேற்று சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும்பொருட்டும், ”போதைப்பொருள் இல்லாத இந்தியா”வை உருவாக்கிடவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேரணியில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக தருமபுரி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இவ்விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக தருமபுரி அரசு கலைக்கல்லூரி வரை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்களால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும், சட்ட விரோத கடத்துதலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்)  நர்மதா, துணை காவல் கண்காணிப்பாளர் (கலால்) ரமேஷ், தனி வட்டாட்சியர் கேசவமூர்த்தி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News