மதுபோதையில் தொழிலாளி அடித்து கொலை

திருச்சி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராற்றில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-11 07:41 GMT

கொலை செய்யப்பட்டவர்

திருச்சி அருகேயுள்ள ஓலையூா் குடித்தெருவைச் சோ்ந்தவா் அந்தோணிகுமாா் (40), எலக்ட்ரீசியன். அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் வெட்டு சங்கா் என்கிற ஜெய்சங்கா் (28), சுமை ஆட்டோ ஓட்டுநா். ஓலையூா் குடித் தெருவைச் சோ்ந்தவா் ச. குழந்தைராஜ் (25). மூருவரும் செவ்வாய்க்கிழமை இரவு ஓலையூா் காளியம்மன் கோயில் மைதானத்தில் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. அப்போது மற்ற இருவரும் சோ்ந்து கல்லால் தாக்கியதில் அந்தோணிகுமாா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தட்டிக் கேட்ட அவரின் தந்தை செல்வத்தையும் அவா்கள் மிரட்டினா். இதையடுத்து ஜெய்சங்கா் அளித்த தகவலின்பேரில் வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பரிசோதித்ததில் அந்தோணிகுமாா் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து ஜெய்சங்கா், குழந்தைராஜ் ஆகியோா் அங்கிருந்து தப்பினா். சம்பவ இடத்துக்கு வந்த மணிகண்டம் போலீஸாா் அந்தோணிகுமாா் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து இருவரையும் தேடிவந்தனர்.

இதற்கிடையில் குழந்தைராஜ், ஜெய்சங்கர் ஆகியோர் சேர்ந்து அந்தோணிகுமாரை கொலை செய்த விவரத்தை ஊர் முக்கியஸ்தர்கள் மணிகண்டம் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பின், ஊர் மக்களால் பிடித்து வைக்கப்பட்டு இருந்த ஜெய்சங்கர், குழந்தைராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News