திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
செய்யூர் அருகே வெடால் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
செய்யூர் அருகே வெடால் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பொருட்செலவு அதிகம் என்பதால், கிராம மக்கள் பேச்சு நடத்தி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அக்னி வசந்த விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு அக்னி வசந்த விழா நடத்தப்பட்டது. பின், 2022-ம் நடக்க இருந்த திருவிழா, பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஆண்டு விமரிசையாக நடந்தது. கடந்த மாதம், கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா துவங்கியது.
தினமும் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை 11:30 மணிக்கு, பாரத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. பிரமாண்டமாக கோவில் அருகே களிமண்ணால் 25 அடி நீள துரியோதனன் சிலை அமைத்து, பஞ்ச வர்ணம் பூசி நாடக நடிகர்கள் பீமன்,- துரியோதனன் வேடமிட்டு, மகாபாரதத்தில் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. பின், கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.