கோடை மழை எதிரொலி : உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்
கோடை மழைநீரை சேகரிக்க விவசாயிகள் நிலத்தை டிராக்டர் மூலமாக பண்படுத்தி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா பருவத்தில், 32,110 ஏக்கர் மற்றும் நவரை பருவத்தில், 51,870 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டன. தற்போது, நெல் அறுவடை பணி முடிந்துள்ளது. நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில், 37 நெல் கொள்முதல் நிலையங்கள், 33 தேசிய நுகர்வோர் கழக கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்கள் என, 70 நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்து முடிக்கப்பட்டு உள்ளது.
ஆழ்துளை கிணறு நீர் பாசனம் இருக்கும் விவசாயிகள், உழவு ஓட்டி நெல் பயிரை நடவு செய்துள்ளனர். நீர் பாசனம் வசதி இல்லாத பெரும்பாலான விவசாயிகள் நிலத்தை தரிசாக போட்டுள்ளனர். சமீபத்தில், கத்திரி வெயிலில் மழை பெய்ததால், தரிசாக போடப்பட்ட நிலத்தில், டிராக்டர் மூலமாக உழவு பணியை, காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
நேற்று, காஞ்சிபுரம் அடுத்த கம்மவார்பாளையம், புள்ளலுார், புரிசை, மூலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கோடை மழைநீரை சேகரிக்க, நிலத்தை டிராக்டர் மூலமாக பண்படுத்தி வருகின்றனர். இதனால், ஆடி மாதம் துவக்கத்தில் நெல், காய்கறி ஆகிய பலவித பயிர்களை சாகுபடி செய்வதற்கு வசதியாக இருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.