அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு

தக்கலை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டி வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்.

Update: 2024-03-24 05:32 GMT

தேர்தல் விழிப்புணர்வு

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றும் வகையிலும், நமது மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ செய்யும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தக்கலை ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100% வாக்களிப்பதன் முக்கியதுவத்தை வலியுறுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பாபு, அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்கள்.

அதனைத்தொடர்ந்து திட்ட இயக்குநர் அவர்கள் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய ஒட்டுவில்லைகளை (ஸ்டீக்கர்) ஒட்டி விழிப்புணர்வ ஏற்படுத்தினார்கள்.மேலும் "வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாக்களிக்கும் நேரமிது” மற்றும் ”வாக்களிப்பது போல் எதுவும் இல்லை நான் உறுதியாக வாக்களிப்பேன்" என்ற விழிப்புணர்வு வாசகங்களை மையப்படுத்தி கலைநிகழ்ச்சியுடன் கூடிய பேரணி நடைபெற்றது.நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பாபு, பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் திரு.லெனின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News