அடிப்படை வசதி செய்து தராததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
செம்பனார்கோயிலில் அடிப்படை வசதி செய்து தராததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த பரசலூர் ஊராட்சி கண்ணதாசன் தெருவில் உள்ள சித்தி விநாயகர் நகரில் 15 குடியிருப்புகள் உள்ளன. மேலும், இந்த நகரில் அருகாமையில் உள்ள 2 பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் அங்கன்வாடி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 2010-ஆம் ஆண்டு சாலை அமைத்துத் தரப்பட்டது. போடப்பட்ட சில ஆண்டுகளிலேயே சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து இந்த வழியாக நடந்தும், இருசக்கர வாகனத்தில் செல்ல வயதானவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதனால் இந்த சாலையை புதுப்பித்துத் தர வலியுறுத்தி இப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்துள்ளனர். 5 கிராம சபைக் கூட்டங்களில் இதற்காக தீர்;மானம் நிறைவேற்றிய கிராமமக்கள், கடைசியாக ஜனவரி மாதம் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற மாவட்ட ஆட்சியரை வழிமறித்து சாலையை காண்பித்து மனு அளித்துள்ளனர். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான சாலையில் பேனர் வைத்து அறிவித்துள்ளனர். மேலும், அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி, உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்காவிட்டால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கண்டன முழக்கங்களை எழுப்பி அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.