சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு
வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.;
வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் -2024யையொட்டி, 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளுக்கு 1,252 அலுவலர்களும், 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளுக்கு 1,364 அலுவலர்களும், 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளுக்கு 1,388 அலுவலர்களும், 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 254 வாக்குச்சாவடிகளுக்கு 1,220 அலுவலர்களும், 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளுக்கு 1,252 அலுவலர்களும், 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 279 வாக்குச்சாவடிகளுக்கு 1,340 அலுவலர்களும் என மொத்தம் 1,628 வாக்குசாவடிகளுக்கு 6,512 அலுவலர்கள் மற்றும் 20 சதவிகிதம் தயார்நிலையில் 1,304 அலுவலர்கள் என மொத்தம் 7,816 அலுவலர்களுக்கு கணினி மூலம் முதற்கட்டமாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.