மண்டல மேலாளரைக் கண்டித்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த மண்டல மேலாளரைக் கண்டித்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடைய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முதுநிலை மண்டல மேலாளர் விளம்பர பேனரை கிழித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளராக ஸ்ரீமோகனா (59) பணியாற்றி வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடைய பணியாளர்கள் சிலரை பணியிடை நீக்கம் செய்தும், பல பணியாளர்களை பணி இடமாற்றமும் செய்துள்ளார். இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் சார்பில், செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக, மண்டல மேலாளரின் பழிவாங்கும் போக்கை கண்டித்து விளம்பரத் தட்டியை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பணியாளர்கள் ஒன்று கூடினர்.
அப்போது அங்கு வந்த முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீமோகனா, யாரைக் கேட்டு இங்கு விளம்பரத் தட்டியை வைத்தீர்கள், நீங்கள் பணம் சம்பாதிக்க இதுபோல நடந்து கொள்கிறீர்கள் என அங்கிருந்த பணியாளர்களிடம் கோபமாக கேட்டார். அப்போது அவரை செல்போனில் வீடியோ எடுத்த பணியாளர்களை விரட்டி அவரை வீடியோ எடுக்க கூடாது என மிரட்டினார். மேலும் செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது அவர்களையும் எடுக்க கூடாது என்றார். இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது தஞ்சாவூர் தெற்கு காவல்துறையினர் வந்ததும் முதுநிலை மண்டல மேலாளர் அமைதியாகி விட்டு தனது அலுவலக இருக்கைக்கு சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் கூறுகையில்: கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களையும், அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் பழிவாங்கும் நோக்கத்தில் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளில், முதுநிலை மண்டல மேலாளர் ஈடுபடுகிறார். தொழிலாளர்கள் அவரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டால் அனுமதி இல்லை என்கிறார். பணியாளர்களை ஒருமையில் பேசி திட்டுகிறார். இதனை கண்டித்து தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த விளம்பர தட்டியை வைத்தோம். ஆனால் அங்கு வந்த முதுநிலை மண்டல மேலாளர் விளம்பரத் தட்டியை கிழித்து எங்களிடம் தகராறில் ஈடுபட்டார்" என்றனர்.
இதுகுறித்து முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீ மோகனாவிடம் கேட்டபோது: இந்த துறையில் நான் நியாயமாகவும், நேர்மையாகவும் செயல்பட தடையாக இருப்பதாக கூறி என்னிடம் வம்பு செய்கின்றனர். கொள்முதல் நிலையங்களுக்கு ஆய்வுக்கு சென்று அங்கு நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து, அதற்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என் மீது வீண் பழிசுமத்தி விமர்சனம் செய்து என்னை மிரட்டுகின்றனர். பெண் அதிகாரி எனவும் பாராமல் என் கையை பிடித்து முறுக்கியதால் எனக்கு வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் பணம் சம்பாதிக்க நான் தடையாக இருப்பதால் என்னை இங்கிருந்து மாற்ற என்மீது தேவையில்லாமல் பழி போடுகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் நான் மேலாண் இயக்குநருக்கு தெரியப்படுத்தி விட்டேன்" என்றார்.