மஞ்சள் நிறமாக மாறிய எண்ணூர் முகத்துவாரம் தண்ணீர்... கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!!
எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர். இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.