புதிரை வண்ணார் சமூகத்தினர் கணக்கெடுப்பு

புதிரை வண்ணார் சமூகத்தின் பொருளாதார நிலை கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-03-16 18:18 GMT

மாவட்ட ஆட்சியர் 

புதிரை வண்ணார் சமூகத்தின் பொருளாதார நிலை கணக்கெடுப்பு பணிக்கு வரும் குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார நிலை அறிந்து, அவர்களின் நிலையை உயர்த்தவும், கல்வியில் மேம்பாடு அடைய செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிரை வண்ணார் மக்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல், அவர்களின் வாழ்வாதாரம் பற்றிய அறிக்கை தயாரித்தல், அதனை செயல்படுத்த மென்பொருள் மற்றும் இணைய முகப்பு உருவாக்குதல், தொழில், திறன் மேம்பாடு மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி அளித்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தால் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஐ.பி.எஸ்.ஓ.எஸ்., நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் சார்பில் மாவட்ட அலுவலக அலுவலர்கள், புதிரை வண்ணார் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற கிராம உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று கணக்கெடுப்பு பற்றிய பரவலான தகவல்களை உறுதிப்படுத்த உள்ளனர். கணக்கெடுப்பு பணிக்கு வரும் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News