கேரளா அரசு பஸ் மோதி முன்னாள் ராணுவ வீரர் படுகாயம்
கேரளா அரசு பேருந்து மோதி முன்னாள் ராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (49). இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 15ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வேலை முடிந்து நேற்று முன்தினம் காலை பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார விளை பகுதியில் வைத்து எதிரே வேகமாக வந்த கேரளா அரசு பஸ் ஜஸ்டின் ராஜ் ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜஸ்டின் ராஜ் படுகாயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உறவினர்கள் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜஸ்டின் ராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அங்கு சுய நினைவு திரும்பாத நிலையில் தீவிர சிகிட்சையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் மனைவி ஷீஜா (45) இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கேரளா அரசு பஸ் டிரைவர் வினோத் குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.