போலி மருத்துவர் கைது - மெடிக்கலுக்கு சீல்
திருப்பூர் அருகே முறைகேடாக செயல்பட்ட மெடிக்கலுக்கு சீல் வைத்து, போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி மருத்துவமனைகளுக்கு சீல் வைத்தும், போலி மருத்துவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் திருப்பூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர்கள் ஹரிகோபாலகிருஷ்ணன், வீரபாண்டி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முருகம்பாளையம் சூர்யகிருஷ்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரகாஷ் மெடிக்கலில் ஆய்வு செய்தனர். அப்போது ஜோலி அகஸ்டின் (64) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் உரிய கல்வி தகுதியின்றி ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்ததும், மேலும் நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், உரிய கல்வி தகுதி இன்றி சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் ஜோலி அகஸ்டின் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் ஜோலி அகஸ்டினை கைது செய்தனர்.