குடும்பத் தகராறு- தலைமை ஆசிரியை கணவன் விஷம் குடித்து தற்கொலை
குடும்பத் தகராறு- தலைமை ஆசிரியை கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-02-26 05:12 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, அபிப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் வயது 57. இவரது மனைவி அமுதா வயது 51. இவர் அருகில் உள்ள கோவிலூர் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். தலைமை ஆசிரியை அமுதா அவரது தாயார் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதனால், மனவிரக்தி அடைந்த குணசேகரன் பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 10 மணியளவில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த அமுதா இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த குணசேகரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.