ஆடு, மாடு வளர்ப்பு குறித்த பண்ணைப் பள்ளி வகுப்பு
பட்டுக்கோட்டையில் ஆடு, மாடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) இ.அப்சரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ், மாளியக்காடு கிராமத்தில் லாபகரமான முறையில் ஆடு, மாடு வளர்ப்பு குறித்த பண்ணை பள்ளி வகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்பயிற்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் எஸ் ரமணி முன்னிலை வகித்தார். கால்நடைத்துறை உதவி மருத்துவர் சீதா, கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு, தீவனப்புல் சாகுபடி குறித்தும், முக்கியப் தீவனப்புல் ரகங்கள் பற்றியும் விவசாயிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில், ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் வரவேற்றார். நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் அமிர்த லீலியா நன்றி கூறினார்.