ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் 240 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜை சந்தித்து உப்பாறு அணைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக சந்தேகங்களை கேட்பதற்காக விவசாயிகள் மண்டபத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் பேச முற்பட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் காரில் சென்று அமர்ந்து கொண்டார்.அப்போது ஆத்திரம் அடைந்த உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் சிவக்குமார் தண்ணீர் கொடுகள் விவசாயிகளின் குறைகளை கேட்டுச் செல்லுங்கள் என மாவட்ட ஆட்சித் தலைவரின் காரை வழிமறித்து கேட்டார்.
அப்போதும் அங்கு வந்திருந்த 50 விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டு கலெக்டரின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.அதனைத் தொடர்ந்து அங்கிருந்து டி.எஸ்.பி. கலையரசன் தலைமையிலான போலீசார் அவரை குண்டுகட்டாக இழுத்துச் சென்று போலீஸ் எடுத்து வந்த பேருந்தில் ஏற்ற முயன்றனர். அதற்கு விவசாயிகள் ஏற மறுத்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.