சேதமடைந்த சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சியில் போக்குவரத்துக்கு பயனற்ற மோசமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-23 06:27 GMT

சேதமடைந்த சாலை 

பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சி விவசாயிகள் சார்பாக வழக்குரைஞர் பி.கரிகாலன் தஞ்சை மாவட்ட ஆட்சியர், பேராவூரணி ஒன்றிய ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சியில் சுமார் 800 மீட்டர் நீளமுள்ள புடவயல் சாலை போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் மிக மோசமான நிலையில் உள்ளது.

இந்தச் சாலை மாவடுகுறிச்சி மேற்கு, ரங்கநாயகிபுரம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கான ஒரே பிரதான சாலையாகும். இந்தச் சாலையை விவசாயப் பணிகளுக்கு தேவையான பொருள்கள் கொண்டு செல்லவும், விளைவித்த பொருள்களை கொண்டு வரவும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். சாலையின் நடுவில் பெரும் பள்ளமும், தண்ணீர் தேங்கியும் உள்ளது.

தினசரி இந்தச் சாலையை பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்டவர்களிடம் மனு கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News