உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தில் நிதிப்பயன் பெறுதலில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்,
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த, நிதிப்பயன் விடுபட்ட தகுதியான விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற்றிட நடவடிக்கைகள் எடுக்கவும், அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களிலும் மின்னனு எடை மேடை மூலம் பால் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், வேளாண்மைத் துறையில் அதிக விளைச்சல் தரகூடிய புதிய நெல் ரகங்களை வழங்க வேண்டும் எனவும், புதுப்பளையம் ஊராட்சியில் ஜி.என்.பாளையத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் எனவும்,
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையின் மூலம் ஏரி குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றவும், கால்நடை மருத்துவ மனைகளில் போதிய அளவு தடுப்பூசி மற்றும் மருந்துகள் இருப்பு வைத்திடவும், பயிர்கடன் தகுதியுள்ள விவசாயிகளுக்கு வழங்கிடவும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா மற்றும் இதர உரங்கள் இருப்பு வைத்திடவும், அனைத்து வேளாண் கிடங்குகளிலும் போதிய அளவு விதைகள் இருப்பு வைத்திடவும் மற்றும் குறைதீர்வு மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்குமாறும்,
பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு விரைவில் பதில் வழங்கவும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் தனிநபர் தொடர்பான மனுக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டது. முன்னதாக கால்நடை பாராமரிப்பு துறையின் சார்பில் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த 2023-24 க்கான கையேட்டினை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், சி.ஹரகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், மண்டல இணை இயக்குநர், கால்நடைத்துறை டாக்டர் சோமசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில் குமார், முன்னோடி வங்கி மேலாளர் கௌரி முனைவர் க.உமாபதி, மற்றும் பல்துறை தலைவர்கள், அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.