ஏரிகள் துார்வாராததால் உத்திரமேரூரில் விவசாயிகள் கவலை
உத்திரமேரூரில் உள்ள ஏரிகளை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-06-21 05:33 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின்கீழ், 92 ஏரிகள், ஒன்றிய கட்டுப்பாட்டில் 124 ஏரிகள் என, மொத்தம் 216 ஏரிகள் உள்ளன. மொத்தமுள்ள 216 ஏரிகளில், 100க்கும் மேற்பட்ட ஏரிகள், பல ஆண்டுகளாக துார்ந்து உள்ளன. சில ஏரிகள் மதகு ஓட்டை, கலங்கல் பகுதி பழுது, ஏரிக்கரை பலவீனம் என பராமரிப்பின்மையால் சீர் இல்லாமல் உள்ளது. இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலான சாத்தணஞ்சேரி, கடல்மங்கலம், எடமச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின்கீழ், துார்வாரி சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், பெரும்பாலான ஏரிகள் நீண்டகாலமாகப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனிடையே, உத்திரமேரூர் ஒன்றியத்தில், மத்திய அரசின் 'ஜல்சக்தி' துறை சார்பில், 'ஆர்.ஆர்.ஆர்.,' திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு உத்திரமேரூர் மற்றும் அரும்புலியூர் ஆகிய இரண்டு ஏரிகள் கரை பலப்படுத்துதல், கலங்கல் பகுதி மற்றும் மதகுகள் சீரமைத்தல் போன்ற புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம், ஆலப்பாக்கம், திருப்புலிவனம், கம்மளாம்பூண்டி, சிறுபினாயூர், ஒழையூர் ஆகிய ஆறு ஏரிகள் துார்வாரி சீரமைக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை சார்பில் அச்சமயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து அடுத்தகட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.