கொப்பரைத் தேங்காய் பொது ஏலத்தை தவிர்க்க விவசாயிகள் கோரிக்கை

கொப்பரைத் தேங்காய் பொது ஏலத்தை தவிர்க்க விவசாயிகள் முன்னேற்ற கழகம் கோரிக்கை;

Update: 2023-12-10 17:46 GMT

கொப்பரைத் தேங்காய் பொது ஏலத்தை தவிர்க்க விவசாயிகள் முன்னேற்ற கழகம் கோரிக்கை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள, கொப்பரைத் தேங்காய்களை பொது ஏலத்தில் விற்பனை செய்யாமல், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களாக தயார் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கழக, நிறுவன தலைவர் செல்லராஜாமணி, பொது செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பாரத பிரதமருக்கு அனுப்பியுள்ள மனுவில், தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுமார் 20 கோடி தென்னை மரங்கள் உள்ளன. லட்சக்கணக்கான விவசாயிகள் தென்னை மரத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு கொப்பரைத் தேங்காயை கிலோ ரூ.108 க்கு கொள்முதல் செய்தது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைத் தேங்காய்கள் தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் டன் மத்திய அரசின், இந்திய தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிடம் (NAFED) கைவசம் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கொள்முதல் செய்த கொப்பரை தேங்காய்களை பொது ஏலத்தில், வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.

1 லட்சத்து 15 ஆயிரம் டன் கொப்பரை தேங்காயை பொது ஏலத்தில் விற்பனை செய்தால், வெளி மார்க்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவடையும். ஏற்கனவே தேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காய் விலை சரிந்துள்ளதால் தென்னை விவசாயிகள், பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டின் வறட்சி காலங்களிலும் தென்னை விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே உடனடியாக மத்திய அரசு மேலும் கொப்பரைத் தேங்காய்களை அதிக அளவில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதோடு, கொப்பரைத் தேங்காயில் இருந்து, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக தயார் செய்து இந்தியாவில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது மத்திய அரசு ஒரு ஆண்டிற்கு சுமார் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி மதிப்பில், வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்கிறது. இதற்கு பதிலாக மத்திய அரசு தமிழக தென்னை விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, கொப்பரை தேங்காய்களை பொது ஏலத்தில் விடுவதை தவிர்த்து, பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மதிப்பூட்டப்பட்டப் பொருட்களை தயார் செய்து, ரேசன் கடைகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News