பலாப்பழ விலை சரிவால் விவசாயிகள் வேதனை!
விலைவாசி
Update: 2024-07-15 07:22 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடி பகுதிகளில் விளையும் பலாப்பழத்துக்கு நிகழாண்டில் கடும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வியாபாரிகள் நட்டமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த மாங்காடு, வடகாடு, அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், மறமடக்கி, செரியலூர், பெரியவாடி, மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது மாநிலத்திலேயே ஆலங்குடி பலாவுக்கு தனிச்சுவை உண்டு.கீரமங்கலம், கொத்தமங்கலம், கைகாட்டி, மாங்காடு, வடகாடு, புளிச்சங்காடு பகுதிகளில் பலாப் பழத்துக்கென மொத்த வியாபார ஏல மண்டிகள் உள்ளன. இவர்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கி வந்து வைத்து விற்பனை செய்கின்றனர். கோவை, திருப்பூர், தருமபுரி, ஈரோடு, சேலம், கரூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், வியாபாரிகள் இங்கு வந்து பலாப்பழங்களைக் கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர். மும்பை, பெங்களூருவுக்கும் ஆலங்குடி பலா கொண்டு செல்லப்படுகிறது. நிகழாண்டில் பிப்ரவரி, மார்ச்மாதங்களில் கிலோ ரூ. 30-க்கு விற்ற முதல் தர பலாப்பழங்கள், தற்போது ஜூலையில் கிலோ ரூ. 12-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சரிபாதிக்கும் குறைவாக விலை குறைந்திருக்கிறது. இதுகுறித்து மாங்காடு வியாபாரி சேகர் கூறியது: நிகழாண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதல் தரம் கிலோ ரூ. 30 வரை விற்பனையானது. அதன்பிறகு, ஏப்ரல், மே மாதங்களில் கிலோ ரூ. 20 வரை விற்பனையானது. படிப்படியாக இந்த விலை இன்னும் சரிந்து தற்போது (ஜூலை) கிலோ ரூ. 2 க்கு விற்பனையாகிறது. இரண்டாம் தரம் கொண்டபலாப்பழங்கள் கிலோ ரூ. 7, ரூ. 8- க்கு விற்பனையாகின்றன. பருவநிலை மாற்றத்தால் வெயில் அதிகரித்து, மழை தள்ளிப் போனதுதான் இதன் காரணம். வழக்கமாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பலாப் பிஞ்சுவிடும். 90 நாட்களில் காய்ப்பு முடிந்து அறுவடை ஆரம்பமாகும். ஆனால், நிகழாண்டில் வெயில் அதிகமாக இருந்ததால், பிஞ்சுவிடுவதே தை மாதம் வரை தள்ளிப்போனது. சீசன் தாமதமானது. அதேபோல, பழங்களின் விளைச்சல் தரமும் குறைந்திருக்கிறது. பெரிய அளவில் காய்கள் பெருக்கவில்லை. சிறிய காய்க.... அதற்கேற்ற விலைக்குதானே எடுத்துக் கொள்ளப்படும்.அதன்பிறகு, இப்போது கோடை மழை பெய்வதால் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் வரவு குறைந்திருக்கிறது. அதனால், வருகின்றன பலாப் பழங்களை வியாபாரியிடம் விற்றுவிட வேண்டிய நிலை இருக்கிறது. கிலோவுக்கு ஒன்றிரண்டு ரூபாய் குறைத்துக் கேட்டாலும் கொடுக்க வேண்டிய நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் விலை சரிவு கண்டிருக்கிறது என்கிறார் சேகர்.