இழப்பீடு கேட்டு 6ஆவது நாளாக உண்ணா விரத போராட்டம்: பல்வேறு அமைப்பு ஆதரவு
இழப்பீடு கேட்டு 6ஆவது நாளாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத்தோட்டம் வரை 110 கேவி தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட மின் பாதை செல்லும் வழியில் அமைக்கப்பட்ட, மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீட்டை வழங்காததை கண்டித்து,
கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தலைமையில், அவரது தோட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை முன்னெடுத்து உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து சில விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆறாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சண்முகம், தென்னை மற்றும் வேளாண் சாகுபடி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாவட்ட மகளிர் அணி தலைவி கிருஷ்ணவேணி,
ராணிப்பேட்டை தியாகராஜன், கரூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் இன்று நேரில் சந்தித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆறாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.