14வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு - தந்தை கைது
வெள்ளிசந்தையில் மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-02 11:18 GMT
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் 44 வயது மீன்பிடி தொழிலாளி. அவருக்கு திருமணம் ஆகி 14 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தைக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி சிறுமியின் தந்தை தனது மனைவி வைத்திருந்த பணத்தை திருட்டுத்தனமாக எடுத்து மகள் அணிந்திருந்த மேல் சட்டைக்குள் வைத்தாராம். இதற்கிடையே மனைவி வெளியே சென்றதும் மகள் அருகே வந்த தொழிலாளி நான் உனது மேல் சட்டையில் வைத்திருந்த பணத்தை எனக்கு தா.. என கூறியதோடு, சிறுமியின் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிற சாக்கில் கையால் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். மேலும் திடீரென சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. வெளியே சென்ற தாய் வந்த பின், நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார். சிறுமியின் தாயார் உடனே வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் தந்தை மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.