வேளாண்மை துறை சார்பில் வயல் தினவிழா
எலச்சிபாளையம் அருகே கோக்கலையில் நடந்த வயல் தின விழாவில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.
எலச்சிபாளையம் வட்டாரம், கோக்கலை கிராமத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகள் வயல்தின விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கருத்துகாட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன. இவ்விழாவில் அட்மா விவசாயிகள் குழு தலைவர் தங்கவேல், அட்மாகுழு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமாலா முன்னிலை வகித்து வேளாண்மைத்துறை மத்திய, மாநில திட்டங்கள் மற்றும் மண், நீர்பரிசோதனையின் முக்கியத்துவம், நுண்ணீர் பாசனம் மானியத்திட்டங்கள், இயற்கை உரங்கள், உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தல் குறித்து கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். ஏத்தாபூர் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் இளங்கவி கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு சின்ன வெங்காய பயிரில் விதை நேர்த்தி முறைகள் முதல் அறுவடை தொழில்நுட்பங்கள் வரை சாகுபடி முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சியளித்தார். மேலும், உதவி வேளாண்மை அலுவலர் ராஜதுரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் இடுபொருட்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் பாலலிங்கேஸ்வரன் வேளாண் விற்பனைத்துறை திட்டங்கள் பற்றியும், உதவி தோட்டக்கலை அலுவலர் சுவேதனன் தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு கூறினர். நுண்ணீர் பாசன நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானியத்திட்டங்கள் குறித்து கூறினார்கள். இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் அட்மா திட்ட செயல்பாடுகள் உழவர் செயலி பயன்பாடுகள் பற்றி விரிவாக கூறினார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்