தேர்தல் பணியின்போது இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி
காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதியில் தேர்தல் பணியின் போது இறந்த ஜெயபாலனின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வேலவன் நகர், காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதியில் இன்று தேர்தல் பணியின் போது இறந்ததற்கு ஜெயபாலன் (லேட்) வாரிசுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15,00,000/- க்கான காசோலையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024, 19.04.2024 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு 16.நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 93. சேந்தமங்கலம் (எஸ்.டி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றியிருக்க வேண்டிய வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு 07.04.2024 அன்று சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள வேதலோக வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மேற்கண்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில் அண்ணா நகர் பிரிவு சாலை, வேட்டம்பாடி இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் முதுகலை ஆசிரியர் மா.ஜெயபாலன் (வயது 53) என்பவர் இறந்து விட்டார். மா.ஜெயபாலன் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய போது நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி, சாலை விபத்தில் இறந்த மா.ஜெயபாலன் (வயது 53) அவரது குடும்பத்தினருக்கு கருணைத்தொகையாக ரூ.15,00,000/- (ரூபாய் பதினைந்து இலட்சம்) வழங்கிட தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன் அடிப்படையில் இராசிபுரம் வட்டம், இராசிபுரம் நகராட்சி, கதவு எண் 22, வேலவன் நகர், காட்டூர் காட்டுக்கொட்டாய் என்ற முகவரியில் தேர்தல் பணியின் போது இறந்ததற்கு ஜெயபாலன் (லேட்) வாரிசுதாரர்களாகிய மனைவி ம.கேஸ்வரி, மகள் ஜெ.தாரணா, மகன் ஜெ.ஹிதேஷ்பாலாஜி, தந்தை மாதையன், தாய் உண்ணாமலை, ஆகிய 5 நபர்களுக்கும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா இன்று நேரடியாக அவர்களது இல்லத்திற்கு சென்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15,00,000/- (ரூபாய் பதினைந்து இலட்சம்) க்கான காசோலையை வழங்கினார்.