ஜரிகை குடோனில் தீ விபத்து : ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
சங்ககிரி அருகே இளம்பிள்ளையில் ஜரிகை குடோனில் ஏற்பட்ட தீ விபத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.;
தீ விபத்து
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாசிங் என்பவர் இளம்பிள்ளை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் கட்டிடத்தினை வாடகைக்கு எடுத்து அதில் சேலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருளான ஜரிகை தயாரிக்கும் மிஷின் மற்றும் ஜரிகை காலி கட்டை ஆகியவற்றை குடோனில் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இந்தக் குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டப் பகலில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயே அணைக்க முற்பட்டனர். மேலும் தீ மலமலவென பரவியதால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சேலைக்கு பயன்படுத்தப்படும் ஜரிகைகள் மற்றும் மிஷனரிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும் இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.