முதல் தலைமுறையினர் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர் - தமிமுன் அன்சாரி
நாடு முழுவதும் முதல் தலைமுறை வாக்காளர்களின் விருப்ப தேர்வு இந்தியா கூட்டணியாக இருந்திருக்கிறது. நாங்கள் அசைக்க முடியாத சக்தி என்று கூறிய பிரதமர் மோடி, பாஜவை அசைத்து பார்த்து இந்திய வாக்காளர்கள் நிருபித்துள்ளனர் என மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
மயிலாடுதுறை அருகே வாணதிராஜபுரம் பகுதியில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றிபெற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். இதற்காக பாடுபட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம். இந்த தேர்தல் பல்வேறு விதமான எண்ண அலைகளை எதிரொலித்திருக்கிறது. இந்தியா கூட்டணி மக்களிடம் நம்பிக்கையை பெற்று எதிர்கட்சிகளின் சங்கமமாக உள்ளது.
பாஜவிற்கு வாக்குகளை குறைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்களித்து இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். நாடு முழுவதும் முதல் தலைமுறை வாக்காளர்களின் விருப்ப தேர்வு இந்தியா கூட்டணியாக இருந்திருக்கிறது. நாங்கள் அசைக்க முடியாத சக்தி என்று கூறிய பிரதமர் மோடி, பாஜவை அசைத்து பார்த்து இந்திய வாக்காளர்கள் நிருபித்துள்ளனர். அரசியல் சாசன சட்டத்தையின் மாண்புகளையும் சீர்குலைக்க முடியாது என்று எச்சரித்துள்ளனர். உ.பி.யில் எதிர்பாராத எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக அயோத்தியில் பாஜவிற்கு தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். ராமரை வைத்து அரசியல் செய்யக்கூடாது, முடியாது இந்தியர்கள் அண்ணன், தம்பிகளாக இருப்போம்.
அயோத்தி மண்ணையும், ராமரை காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களை பிரிக்க முடியாது என்பதை வாக்காளர்கள் காட்டியுள்ளனர். அயோத்தி பைசாபாத் தொகுதியில் பெரும்தோல்வியை பாஜவிற்கு வாக்காளர்கள் கொடுத்த தீர்ப்பை புரிந்துகொண்டு மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, வெறுப்புஅரசியலை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் நாட்டின் ஒருமைபாடு வளர்ச்சிக்கு பிரதமர் பாடுபட வேண்டும். இவிஎம் இயந்திரத்தில் ஒப்புகை சீட்டுடன் வாக்களிக்கும் முறையை கொண்டுவர வேண்டுமென்றுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் மீது சந்தேகம் உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் பொழுது காலை 10.30 மணிக்கு பிறகு தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை செய்கிறது என்னவென்றால் எதிர்கட்சிகளுக்கு தெளிவுபடும் வகையில் வாக்கு எண்ணவேண்மென்று அறிவிக்கின்றனர். இந்தியா கூட்டணி முன்னிலையில் இருக்கம்போது இதுபோல்கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜ 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சிதைந்து இருக்கிறது. பஞ்சாப்பில் சர்ச்சைக்குரிய 2 வேட்பாளர்கள் சுயேட்சையாக வெற்றிபெற்றுள்ளனர்.
மணிப்பூரில் பாஜக 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவின் அணுகுமுறையை பல்வேறு மாநில மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உணர்வுகளையும் உள்ளடக்கி இந்த 3 வது முறையாக நீங்கள் ஆட்சி செய்யுங்கள் என்று சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு வேண்டுகோளை ஏற்று மக்களை தொகையை குறைத்ததால் தமிழக எம்.பி.தொகுதியை குறைப்போம் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் எம்.பி.க்களை எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்பதுதான் அவர்கள் திட்டம். அதற்கு ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார் .