நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதலாவது சிறப்பு பேரவைக் கூட்டம் !

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.ராஜேஸ்குமார் MP தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-06-08 12:07 GMT

மத்திய கூட்டுறவு வங்கி பேரவைக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு கூட்டம் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ ,கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை அமைப்பாளராகவும், தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. கூட்டத்திற்கு தலைமை வகித்துப்பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம் 1998ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் இதுவரை கூட்டுறவு அமைப்புகள் அனைத்தும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 3 மாதங்களுக்கு முன்பு, தனியாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த வங்கி தனியாக இயங்கும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து நாமக்கல் வங்கிக்கான டெபாசிட்டுகள் மற்றும் கடன் கணக்குகள் பிரிக்கப்பட உள்ளது. இதற்கான வேலைகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி அனுமதியைப் பெற்று தனியாக இயங்கும் வகையில் அனுமதி பெறுவதற்காக, வங்கியின் முதலாவது சிறப்பு பேரவைக் கூட்டம் வருகிற ஜூன் 25ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி துவங்க அனுமதி அளித்த, தமிழக முதல்வர், இளைஞர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அனைத்து சட்டபூர்வமான பணிகள் முடிவடைந்தவுடன், தேவையான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, இன்னும் 3 மாதத்தில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனியாக செயல்படத்துவங்கும் இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி இயக்குனர்கள் டாக்டர் ஆா்.மாயவன், அ.அசோக்குமாா், வி.பி.ராணி, வி.கௌரி, ஆா்.ஜோதிலட்சுமி, எஸ்.செல்வகுமாா், பி.பாலசுப்ரமணியம், பி.நவலடி, எம்.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News