மகனை அடித்துக் கொன்றதாக மீனவர் கைது
அதிராம்பட்டினத்தில் மகனை அடித்துக் கொன்ற மீனவர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-05-01 14:23 GMT
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில், மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு மணிகண்டன் (28) என்ற மகன் இருந்தார். இந்நிலையில், மீனவர்களான இவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது நடந்த கைகலப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து அன்று நள்ளிரவு 1 மணி அளவில் மணிகண்டன் திடீரென இறந்தார். இது தொடர்பாக ரமேஷின் மனைவி லட்சுமி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் சம்பவத்தன்று தனது கணவர் ரமேசுக்கும், மகன் மணிகண்டனுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து மகன் மணிகண்டனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார் என கூறி உள்ளார். இந்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் மணிகண்டன் உடலை அதிராம்பட்டினம். அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.