தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்ல தயாராகும் தஞ்சை மாவட்டம் மீனவர்கள்
தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்ல தயாராகும் தஞ்சை மாவட்டம் மீனவர்கள்
Update: 2024-06-14 07:03 GMT
தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால், விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஆயத்த நிலையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 147 விசைப்படகுகள் உள்ளன. இதல்லமால் மாவட்டம் முழுவதும் உள்ள 32 மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கான கண்ணாடி நார் இழைப்படகுகள், நாட்டுப்படகுகள் 4,500 க்கும் மேற்பட்டவை உள்ளன. தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் மீன்பிடி வலைகளை தயார் செய்து வைத்திருந்தனர். மீன்பிடி தடைகாலத்தில் விசைப் படகு மீனவர்கள் ஆள் கடலுக்குச் செல்லாததால், குறைந்த தூரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும் சங்காயம் எனப்படும் கோழித் தீவனம் தயாரிக்க உதவும் சிறிய வகை மீன்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. மீன்பிடித் தடைக்காலம் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்திருந்தனர். மேலும் கருவாடு காய வைக்கும் பணிகள், ஐஸ் உற்பத்தி, தலைச்சுமை வியாபாரிகள் மற்றும் துறைமுகங்களில் தேநீர் கடை, உணவகம் வைத்திருப்பவர்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருந்தனர். மீன்பிடி தடைகாலத்தில் தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் நிகழாண்டு ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது. தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை மராமத்து செய்து, வண்ணம் பூசி தயார் நிலையில் வைத்துள்ளனர். தற்போது கடலுக்குச் செல்ல படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல், உணவுப் பொருட்கள், குடிநீர், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை தயார்படுத்தும் பணிகள் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை விசைப்படகுகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே கடலுக்கு செல்லும் என்பதால், வரும் ஜூன் 15ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். வெள்ளிக்கிழமை முதல் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டுகளை வழங்குவார்கள். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வந்த பிறகு மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக மீன்கள் விலை வெகுவாக குறையும் சூழல் உள்ளது. மேலும், வேலைக்கான உத்தரவாதம் இருப்பதால், மீன்பிடி தொழிலாளர்களும் கடலுக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.