சேலத்திலிருந்து சீரடி,திருப்பதிக்கு விமான சேவை -எம்.பி பார்த்திபன்
சேலத்திலிருந்து சீரடிக்கும், திருப்பதிக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளதாக சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு முகாம் மூலமாக பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், மக்களைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தலைப்பில் மக்களுடைய இல்லம் தேடி 1 லட்சத்து 18 ஆயிரம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உதவிகள்,50 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாமல் இருந்த சாலை வசதிகள், பாலங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சரபங்கா ஆற்றின் குறுக்கே பண்ணப்பட்டி பகுதியில் ஒரு பாலமும், இரும்பாலை சாலையில் 10 ஊராட்சிகளை இணைக்கும் பகுதியில் பாலம் துண்டிக்கப்பட்டிருந்தது 40 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருந்த பாலப்பணிகளை சிறப்பு அனுமதி பெற்று செய்யப்பட்டுள்ளது மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று ஜருகு மலை மற்றும் தீவட்டிப்பட்டி பகுதியில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் இருந்த சேலம் விமான நிலையம் தற்போது 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சேலத்தின் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேலத்திலிருந்து சீரடிக்கும், திருப்பதிக்கும் விமான சேவை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது ஆனால் தற்போது அமைச்சர் நேரு பொறுப்பேற்ற பிறகு 575 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது கூடுதலாக மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு சாலை சாக்கடை குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது முள்ளுவாடி கேட் மற்றும் டிஎம்எஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலங்கள் விரைந்து முடிக்கப்பட்டு நவம்பர் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.